search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடைக்குட்டி சிங்கம் விமர்சனம்"

    பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி - சாயிஷா நடிப்பில் வெளியாகி இருக்கும் `கடைக்குட்டி சிங்கம்' படத்தின் விமர்சனம். #KKS #KadaiKuttySingam #Karthi
    விவசாயத்தின் முக்கியத்துவம், கூட்டுக்குடும்பத்தின் அவசியம், சொந்த பந்தங்களின் பிணைப்பை மையப்படுத்தி படத்தின் கதை நகர்கிறது. 

    சத்யராஜுக்கும், விஜி சந்திரசேகருக்கும் தொடர்ந்து பெண் குழந்தைகளாக பிறக்கின்றன. ஒருகட்டத்தில் விஜியால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிடுவதால், தனக்கு பிறகு குடும்பத்தை காக்க ஒரு ஆண் சிங்கம் வேண்டும் என்று இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார் சத்யராஜ். சத்யராஜின் மனைவி விஜி, தனது தங்கை பானுப்பிரியாவையே இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளச் சொல்ல, சத்யராஜும் பானுப்பிரியாவை திருமணம் செய்கிறார். அவர்களுக்கும் ஒரு  பெண் குழந்தை பிறக்கிறது. 



    இதற்கிடையே இனி குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று சொல்லப்பட்ட சத்யராஜின் முதல் மனைவி விஜி, கார்த்தியை பெற்றெடுக்கிறார். அதேநேரத்தில் சத்யராஜ் - விஜியின் மகள் வயிற்றுப் பிள்ளையாக சூரி பிறக்கிறார். இருவரும் மாமன், மச்சானாக வளர்கின்றனர். 

    10-வது படிப்பை முடித்த கார்த்தி விவசாயத்தின் மீது நாட்டம் கொண்டு விவசாயியாக வலம் வருகிறார். விவசாயத்தில் நல்ல வருமானம் ஈட்டும் கார்த்தி, தனது 5 அக்காள்கள் மீதும் அதீத பாசம் கொண்டு, அவர்களுக்கு தேவையானதை செய்து வருகிறார். இதற்கிடையே பொன்வண்ணனின் மகளான நாயகி சாயிஷா மீது காதல் கொள்கிறார். 



    ஆனால் கார்த்தியை திருமணம் செய்து கொள்ள கார்த்தியின் அக்கா மகள்களான பிரியா பவானி சங்கரும், அர்த்தனாவும் போட்டி போடுகின்றனர். அவர்கள் இருவரையும் விட்டு, சாயிஷாவை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார் கார்த்தி. 

    வீட்டில் இரு பெண்கள் இருக்க, கார்த்தி வேறு ஒரு பெண்ணை எப்படி திருமணம் செய்யலாம் என்ற பிரச்சனையில் பங்காளிகளுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டு குடும்பம் இரண்டாக உடைகிறது. இதேநேரத்தில் சாயிஷாவின் முறைமாமனும் கார்த்தியை கொலை செய்ய முயற்சி செய்கிறார்.



    இவ்வாறாக குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனை, காதல் இதையெல்லாம் கார்த்தி எப்படி சமாளித்தார்? கார்த்தி - சாயிஷா இணைந்தார்களா? பிரிந்த அவர்களது குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை. 

    கார்த்தி ஒரு சிறப்பான விவசாயியாக, நல்ல தம்பியாக, குடும்ப பொறுப்புள்ள பிள்ளையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதல் காட்சிகளிலும், தான் ஒரு விவசாயி என்று மாறுதட்டி சொல்லும் இடங்களிலும் உணர்ச்சிவசப்படுத்துகிறார். சூர்யா சிறப்பு தோற்றத்தில் வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார்.



    இதுவரை மாடர்ன் பெண்ணாகவே நடித்து வந்த சாயிஷா, இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக ரசிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக பாடல்களில் ரசிகர்களை கவர்ந்து இழுக்கிறார். கார்த்தி - சாயிஷா இடையேயான காதல் காட்சிகளும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. பிரியா பவானி சங்கர், அர்த்தனா இருவரும் போட்டி போடும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கின்றனர். குடும்பத் தலைவனாக சத்யராஜ், வயதான தோற்றத்தில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது மனைவியாக வரும் விஜி, பானுப்பிரியாவும் ரசிக்க வைத்துள்ளனர். சூரி காமெடியில் திருப்திபடுத்தியிருக்கிறார். 

    இதுதவிர சரவணன், இளவரசு, மாரிமுத்து, ஸ்ரீமன், மெளனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி, சவுந்தரராஜன் என ஒவ்வொருவரும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்து தங்கள் பங்கினை சரியாக செய்துள்ளனர். 



    அழிந்து வரும் விவசாயத்தின் முக்கியத்துவம், விவசாயியின் அருமை, கூட்டுக்குடும்பம், குடும்பத்தின் பலம் என்னவென்பதை பல்வேறு முன்னணி நட்சத்திரங்களை வைத்து இயக்கியிருக்கிறார் பாண்டிராஜ். கல்வி தான் முக்கியம் என்று அனைவரும் வழக்காடும் இந்த சமயத்தில், நான் விவசாயி, என் பெயருக்கு பக்கத்தில் விவசாயி என்று போடுவது தான் பெருமை, அதுவே தனது விருப்பமும் என்று சொல்லும் கார்த்தியின் கதாபாத்திரத்தின் மூலம் விவசாயியை முன்னிலைப்படுத்தி இருக்கிறார். வசனங்கள் படத்திற்கு பெரிய பலம். முதல் பாதி விறுவிறுப்பாக செல்ல, இரண்டாது பாதி பிரச்சனையுடன் சற்றே விறுவிறுப்பு குறைந்து திரைக்கதை நகர்கிறது.

    டி.இமானின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக உள்ளது. பின்னணி இசையில் கிராமத்து சாயலுக்கு ஏற்றபடி கிராமத்து கிங் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். வேல்ராஜின் ஒளிப்பதிவில் இயற்கை நிலங்களை ரம்மியமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

    மொத்தத்தில் `கடைக்குட்டி சிங்கம்' எல்லோருக்கும் துணை. #KadaiKuttySingam #KKS #Karthi #Sayyeshaa

    ×